வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பணியிடை நீக்கம்


வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 28 Jan 2019 3:30 AM IST (Updated: 27 Jan 2019 7:06 PM IST)
t-max-icont-min-icon

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 1,300 பேரை சத்துவாச்சாரி போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் சுந்தரமகாலிங்கம் புகார் அளித்தார். அதன்பேரில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஜாக்டோ–ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணராஜ், மணி, அமர்நாத், பிரின்ஸ் தேவஆசீர்வாதம், சுரேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சுதாகரன், மணி, அமர்நாத், பிரின்ஸ் தேவஆசீர்வாதம் ஆகிய 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்ட குழுவின் முக்கிய நிர்வாகிகளான சேத்துப்பட்டை சேர்ந்த பழனி (வயது 37), குப்பன் (59), திருவண்ணாமலையை சேர்ந்த முருகன் (51), ராமகிருஷ்ணன் (49), அந்தோணிராஜ் (50), சுந்தரராஜ் (38), ஜோதிசங்கர் (52), வேட்டவலத்தை சேர்ந்த வெங்கடேசன் (48), கலசபாக்கத்தை சேர்ந்த செல்வம் (50) ஆகிய 9 பேரை போலீசார் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் நேற்று அதிகாலை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது கலசபாக்கத்தை சேர்ந்த செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மற்ற 8 பேரையும் நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர். இவர்கள் 9 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


Next Story