அரசுத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி டாக்டரிடம் போலீசார் விசாரணை
அரசுத்துறையில் வேலை வாங்கி தருவதாக 6 பேரிடம் ரூ.11 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த ஓமியோபதி டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ராமமூர்த்தி, மணிகண்டபிரபு, திசையன்விளையை சேர்ந்த ராஜகுருவய்யா ஆகியோர் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். இங்கு அவர்கள் புகார் மனு ஒன்று அளித்தனர். பின்னர் அவர்கள் மனு தொடர்பாக கூறியதாவது:–
நாங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போது முகநூலில் காட்பாடியை அடுத்த லத்தேரியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஒருவர் அறிமுகம் ஆனார். அவர், அரசியல் கட்சி தலைவர்கள் பலரை தெரியும் என்றும், அவர்கள் மூலம் அரசுத்துறையில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறினார். இதனை உண்மை என நம்பி கடந்தாண்டு ஜனவரி மாதம் 3 பேரும் ரூ.5½ லட்சம் பணம் கொடுத்தோம்.
ஆனால் ஓராண்டாகியும் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதனால் நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி அவரிடம் கேட்டோம். ஆனால் அவர் அதனை தராமல் காலம் கடத்தி மோசடி செய்து வருகிறார். மேலும் இதேபோன்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரிடம் அரசுத்துறையில் வேலை வாங்கி தருவதாக டாக்டர் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த அன்புராஜ் அளித்த புகாரில், ‘வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.50 ஆயிரத்தை டாக்டர் மோசடி செய்துள்ளார்’ எனவும், வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த கிரிதரன் அளித்த புகாரில், ‘கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் பெற்றுவிட்டு டாக்டர் ஏமாற்றி விட்டார்’ எனவும், பேரணாம்பட்டை சேர்ந்த ரவி அளித்த புகாரில், ‘அரசு வேலை வாங்கித்தருவதாக டாக்டர் ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டார்’ எனவும் கூறியிருந்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட போலீசார் அதன்பேரில் வழக்குப்பதிவு செய்தனர். மேற்கண்ட புகார்கள் தொடர்பாக லத்தேரியை சேர்ந்த ஓமியோபதி டாக்டரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.