செய்யாறில் 5 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது மினிலாரி பறிமுதல்
செய்யாறு அருகே 5 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.
செய்யாறு,
செய்யாறு புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் செய்யாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு நோக்கி சென்ற மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது செய்யாறில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மினிலாரியில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலூரை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திகேயன் (வயது 35), செய்யாறு தாலுகா கருக்கந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த குமார் என்பதும், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா மோட்டூர் கிராமத்தை சேர்ந்த தனப்பால் என்பவர் செய்யாறில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்வதும் தெரியவந்தது.
மேலும் குமார் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி தன்னுடைய வீட்டில் சேமித்து வைத்து அதனை தனபாலுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் 5 டன் ரேஷன் அரிசியுடன் மினிலாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செய்யாறு போலீசார், மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் கார்த்திகேயன் மற்றும் குமாரை கைது செய்தனர்.