குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
பொதுமக்கள் குடிநீரை சிக்கமான பயன்படுத்த வேண்டும் என்று ஓச்சேரியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ராமன் கூறினார்.
பனப்பாக்கம்,
குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஓச்சேரி கிராமத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி திட்ட இயக்குனர் அருண், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் லலிதா வாசித்தார்.
கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:–
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் பற்றாக்குறை காரணமாக சாலை மறியலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை தவிர்த்தால், அனைவருக்கும் போதுமான குடிநீர் கிடைக்கும்.
கடந்த 1–ந் தேதி முதல் தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கலெக்டர் அங்கிருந்த பொதுமக்களிடம் அப்பகுதியில் உள்ள குறைகளை தெரிவிக்கும்படி கூறினார். அப்போது பொதுமக்கள், ‘ஓச்சேரி கிராம மக்கள் உயிரிழந்தால் அடக்கம் செய்வதற்கு சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே ஓச்சேரியில் சுடுகாடு வசதி செய்துதர வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். ஓச்சேரி ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.
இதில், நெமிலி தாசில்தார் கந்தீர்பாவை, தேர்தல் துணைதாசில்தார் மகாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதேவி, மண்டல துணைதாசில்தார் ஜீவிதா, ஊராட்சி செயலாளர்கள் மோகன், சங்கர், அருண், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.