விபத்தில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி சாவு


விபத்தில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 27 Jan 2019 9:55 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரணி, 

ஆரணியை அடுத்த குண்ணத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 24). அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 24). பெங்களூருவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக ஒரு மாதம் விடுமுறையில் சரத்குமார் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 25-ந் தேதி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆரணிக்கு வந்துவிட்டு மீண்டும் குண்ணத் தூருக்கு சென்றனர்.

ஆரணி- வேலூர் நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த பொக்லைன் எந்திரம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரண்ராஜ் இறந்தார்.

இந்த நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்குமார், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story