கிருஷ்ணகிரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


கிருஷ்ணகிரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 27 Jan 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்து பேசியதாவது:- பாளேகுளி ஏரியில் இருந்து வேலம்பட்டி, கூச்சக்கல்லூர், அனகோடி, வேடர்தட்டக்கல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்காக விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை தொடர்பாக பயிற்சியளிக்க வேண்டும். சின்னகோணம்பட்டி கிராமத்தில் பவர்கிரீட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இழப்பீடு கணக்கீடு செய்யாமல், விவசாயிகளிடம் ஒப்புதல் கடிதம் பெறுவதில் அதிகாரிகள் முனைப்பு காட்டுகின்றனர். தென்னை மரங்களில் காய்களை பறித்து வீசும் குரங்குகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்குகளை பிடிக்க வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி அளிக்க வேண்டும். பருவமழை பொய்த்து போனதால், பயிர்கள் கருகி வருகிறது. எனவே, கிருஷ்ணகிரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

மாவட்டத்தில் ஆவின் மூலம் 10 சதவீத பாலும், தனியார் நிறுவனங்கள் மூலம் 90 சதவீத பாலும் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் பால் கொள்முதல் செய்யப்படும், அளவு, தரம் கணக்கீட்டில் முறைகேடு நடைபெறுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனநிலத்திற்கு புகும் யானைகளை விரட்ட டார்ச்லைட், பட்டாசுக்கள் வழங்க வேண்டும். மார்கண்டேய நதியில் அதிகளவில் மணல் கொள்ளை நடக்கிறது. அதை தடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

இயற்கை வேளாண்மை தொடர்பாக வட்டார அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஓசூரில் இயற்கை வேளாண்மை பயிற்சி மையம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழையின்றி காய்ந்த பயிர்கள் தொடர்பாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். பயிர் மதிப்புகள் கணக்கீடு செய்து, இழப்பீடு வழங்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பால் அளவு முறைகேடுகள் தொடர்பாக கால்நடைத்துறை, தொழிலாளர் நலத்துறை மூலம் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் தொடர்பான கோரிக்கைகளை நிலுவையின்றி உடனடியாக தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேசன் (வேளாண் மை), மின்வாரிய மேற்பார்வையாளர் நந்தகோபால், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர், மத்தூர் ஒன்றிய செயலாளர் ரவீந்தராசு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story