அரசலூர், கீழகொளத்தூரில் ஜல்லிக்கட்டு: வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு பரிசு 24 பேர் காயம்


அரசலூர், கீழகொளத்தூரில் ஜல்லிக்கட்டு: வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு பரிசு 24 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 27 Jan 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

அரசலூர், கீழகொளத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட 24 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி ஊருக்கு அருகாமையில் உள்ள வயல் பகுதியில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் கூடம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

இதில் பெரம்பலூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 287 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு களத்தில் இறங்கி காளைகளை அடக்கினர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 431 அலங்கரிக்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த பொதுமக்கள் வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர். வீரர்களும் காளைகளை போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர்.


அப்போது விசுவக்குடியை சேர்ந்த முகமதுசலீம்(வயது 21), கெங்கவல்லி இளவரசன்(23), தழுதாழை பரமசிவம்(40), வேப்பந்தட்டை ஜெயக்குமார்(25), லால்குடி அருண்குமார்(21), நாமக்கல் தனபால்(19), சேந்தமங்கலம் அரவிந்த்(22) உள்பட 20 வீரர்கள் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழாவில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, சில்வர் பாத்திரம், கட்டில், மின்விசிறி, குக்கர் போன்ற பரிசு பொருட்களை விழாக்குழுவினர் உடனுக்குடன் வழங்கினர். இந்த ஜல்லிக்கட்டு மாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் திஷாமித்தல், வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன், வேப்பந்தட்டை தாசில்தார் பொன்னுதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல் அரியலூர் மாவட்டம், கீழகொளத்தூர் கிராமத்தில் நேற்று ஊரின் நடுவே உள்ள நடுத்தெருவில் வாடிவாசல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலாவதாக மாரியம்மன் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் கோட்டாட்சியர் சத்யநாராயணன், தாசில்தார் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.

இதில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோ‌ஷமாக சீறிப்பாய்ந்தன.


இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளுக்கும் கட்டில், சோபா, சில்வர் குடம், அண்டா, மின்விசிறி, தாம்பூலம் வெள்ளிக்காசுகள் மற்றும் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய புதுக்கோட்டையை சேர்ந்த கரண், அருங்கால் கிராமத்தை சேர்ந்த முத்து மற்றும் திருச்சியை சேர்ந்த விஜய் ஆகிய 3 பேருக்கும் போட்டியின் முடிவில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டு சிறந்த மாடுபிடி வீரர்கள் என பெருமை படுத்தப்பட்டனர்.


இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் மொத்தம் 355 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் பெரியய்யா தலைமையில் 200–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காளைகள் முட்டியதில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 9 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மதியம் 12 மணி அளவில் முடிவடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.

Next Story