குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 67 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 67 நிறுவனங்களின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
இது குறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் ஆகியவற்றின் கீழ் 4 தேசிய விடுறைகள் (குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி) மற்றும் 5 பண்டிகை விடுமுறைகள் வருடந்தோறும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு விடுப்பு வழங்கப்படாமல் அத்தினங்களில் சட்டப்படியான அனுமதியுடன் பணிபுரிய வைக்கப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் மற்றும் மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக தொழிலாளர் துறை ஆய்வாளர்களால் கூட்டு ஆய்வு மேற்கொண்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி குடியரசு தினமான நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டம் முழுவதும் எனது தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர் ராஜ்குமார், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் தமிழ்செல்வன், சுப்பிரமணி, ராஜசேகர் மற்றும் அன்புமணி ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
மோட்டார் போக்குவரத்து நிறுவனம், கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் என 121 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 67 நிறுவனங்கள் விதிகளுக்கு புறம்பாக தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியில் அமர்த்தியிருந்தது கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்களின் வேலையளிப்பவர்களுக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story