மாம்பலம் ரெயில் நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
மாம்பலம் ரெயில் நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி மென்பொருள் என்ஜினீயர் சுவாதி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் ‘நிர்பையா’ நிதி மூலம் சென்னையில் உள்ள அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்தது.
இதையடுத்து சென்னையில் பயணிகள் அதிக அளவில் கூடும் முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாம்பலம் ரெயில் நிலையத்தின் 1 மற்றும் 2-வது நடைமேடைகளில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
ஆனால் சாதாரண நாட்களிலேயே கூட்டம் அதிகம் காணப்படும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள் 3, 4 மற்றும் 1ஏ ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் மாம்பலம் ரெயில் நிலையத்தின் நடைமேடைகள் 3, 4 மற்றும் 1ஏ பல்வேறு அசம்பாவித சம்பவம் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
மாம்பலம் ரெயில் நிலையத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் திருவிழா கூட்டம் போல் பயணிகள் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்வர். இரவு நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 மற்றும் 4-ம் நடைமேடைகளில் நின்று செல்லும். இந்த 2 நடைமேடைகள் அதிக நீளம் கொண்டவையாகும்.
3 மற்றும் 4-ம் நடைமேடைகளில் இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் பயணிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்டுவதற்கான வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது. இதனால் ரெயில்வே நிர்வாகம் விரைந்து செயல்பட்டு மாம்பலம் ரெயில் நிலையத்தின் 3, 4 மற்றும் 1ஏ நடைமேடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story