காசிமேட்டில், முன்விரோதம் காரணமாக அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு 8 பேர் கைது


காசிமேட்டில், முன்விரோதம் காரணமாக அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு 8 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2019 11:15 PM GMT (Updated: 27 Jan 2019 6:47 PM GMT)

காசிமேட்டில், முன்விரோதம் காரணமாக அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன்(வயது 24). இவருடைய தம்பி விக்னேஷ் என்ற விக்கி(21). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த லோகேஷ்(19) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லோகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கார்த்திக் என்ற குள்ள கார்த்திக்(24) உள்பட 7 பேர் கொண்ட கும்பல் குமரேசன் வீட்டருகே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அண்ணன்-தம்பிகளான குமரேசன், விக்னேஷ் மற்றும் அந்த தெருவைச் சேர்ந்த பாண்டி ஆகிய 3 பேர் அங்கு வந்தனர். உடனே அங்கு காத்திருந்த லோகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அண்ணன்-தம்பி உள்பட 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து லோகேஷ் உள்பட 8 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் எண்ணூர் சின்னகுப்பத்தில் பதுங்கி இருந்த லோகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான கார்த்திக் என்ற குள்ளகார்த்திக், ராஜசேகர்(26), தமீம் அன்சாரி(21), ரமேஷ்(20), மஸ்தான்(20), சிவராஜ்(23), முகமது சதாம்(20) ஆகிய 8 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story