மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடியின் படத்தை இழிவாக சித்தரித்த ம.தி.மு.க. பிரமுகர் கைது


மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடியின் படத்தை இழிவாக சித்தரித்த ம.தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2019 4:45 AM IST (Updated: 28 Jan 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் அவரது படத்தை இழிவாக சித்தரித்த ம.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சீர்காழி,

மதுரையில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்றும், கருப்பு பலூன்கள் பறக்க விடப்படும் என்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மதுரை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது படத்தை இழிவாக சித்தரித்த ம.தி.மு.க. பிரமுகரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

நாகை மாவட்டம் சீர்காழி ஞானசம்பந்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியராஜ் பாலு. சீர்காழி நகர ம.தி.மு.க. பொறுப்பாளரான இவர், பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது படத்தை பிச்சைக்காரர் போல் இழிவாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சீர்காழி நகர தலைவர் செல்வம், சீர்காழி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில், பிரதமரை இழிவாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட சத்தியராஜ் பாலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரதமர் மோடியை இழிவாக முகநூலில் சித்தரித்த ம.தி.மு.க. பிரமுகர் சத்தியராஜ் பாலுவை(வயது 48) கைது செய்தனர். அவர் மீது அவதூறு தகவல் பரப்புவது உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சத்தியராஜ் பாலுவை போலீசார், சிறையில் அடைத்தனர். பிரதமர் மோடியை இழிவாக சித்தரித்த ம.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story