2-ம் போக காய்கறி சாகுபடியை அதிகரிக்க நிலத்தில் உரமிடும் பணி மும்முரம்
கோத்தகிரியில் 2-ம் போக காய்கறி சாகுபடியை அதிகரிக்க நிலத்தில் உரமிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. தங்களுக்கு சொந்தமான விளைநிலங்களில் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, மேரக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகளையும், ஐஸ் பெர்க், சுகுனி, சல்லாரை, புரூக்கோலி உள்ளிட்ட இங்கிலிஷ் காய்கறிகளையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
கோத்தகிரி பகுதியில் கடந்த 2 மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது. மேலும் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளாமல் தரிசாக விட்டிருந்தனர். தற்போது பனிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளதால், மீண்டும் விவசாயம் மேற்கொள்வதற்கான பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இதையொட்டி விளைநிலங்களை உழுது நிலத்தை பதப்படுத்தினர். மேலும் இயற்கை உரங்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து, தங்களது விளைநிலங்களுக்கு இடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கோத்தகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
காய்கறிகளுக்கு நிலையற்ற கொள்முதல் விலை, பணியாளர்கள் பற்றாக்குறை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக பனிப்பொழிவு நிலவி வந்ததால், தற்காலிகமாக விவசாயத்தை நிறுத்தி வைத்திருந்தோம். மீண்டும் வரும் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்து 2-ம் போக காய்கறி விவசாயம் மேற்கொள்வதற்காக தற்போது விளைநிலங்களை உரமிட்டு பண்படுத்தி வருகிறோம்.
மேலும் காய்கறி சாகுபடி அதிகரிக்கவும், மண்ணின் வளம் பாதிக்காமல் இருக்கவும் ரசாயன உரங்கள் இடுவதை பெரும்பாலும் தவிர்த்து இயற்கை உரத்தை வாங்கி மண்ணுடன் கலந்து வருகிறோம். ஒரு லோடு இயற்கை சாண உரம் ரூ.22 ஆயிரம் ஆகிறது. திம்பம் பகுதியில் இருந்தும், உள்ளூரில் இருந்தும் சாண உரத்தை வாங்கி பயன்படுத்துகிறோம். மேலும் மழைநீர் விளைநிலங்களுக்குள் புகுந்து காய்கறி பயிர்கள் சேதமடையாமல் இருக்க சிறிய ரக பொக்லைன் எந்திரம் மூலம் விளைநிலங்களுக்கிடையே கால்வாய்களை அமைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story