தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை மனு எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் அளித்தனர்


தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை மனு எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் அளித்தனர்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 28 Jan 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிரயாங்குப்பம், விடையூர், ராமன்கோவில், செஞ்சி, சிற்றம்பாக்கம், காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை போன்ற இடங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி அமைப்பாளர் ஆர்.டி.இ. ஆதிசேஷன், மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், திருவள்ளூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் பொன்.பாண்டியன், ஊராட்சி செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட திரளான பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும், தொகுப்பு வீடுகள் கட்டித்தரவேண்டும், குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுகொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ. அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு தலைமை தாங்கினார். மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. ஊராட்சி செயலாளருமான எம்.டி.ஜி.கதிர்வேல் அனைவரையும் வரவேற்றார். வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும், அத்திப்பட்டில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரை பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தி.மு.க.வினர் தொழி லாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சண்முகத்திடம் வழங்கினர்.

இதேபோல் வாயலூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் தசரதன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட, ஒழலூர், ஆலப்பாக்கம், மேலமையூர், வல்லம், பட்ரவாக்கம் போன்ற ஊராட்சிகளில் நேற்று தி.மு.க. சார்பில் கிராம சபை நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தண்டபாணி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம் முன்னிலை வகித்தனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்கள்.

கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், திருமலை, ஈஸ்வரி, சதீஷ்குமார், கருணாகரன், ஜெயக்குமார், ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story