கரியபெருமாள்புதூரில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
கரியபெருமாள்புதூரில் நாளைமறுநாள் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா கரியபெருமாள்புதூரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டார்.
மேலும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டு இருப்பதையும், காளைகள் வெளியேறும் இடத்தில் அதன் உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய் நார்கள் மைதானத்தில் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைக்க ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அறிவுறுத்தி உள்ள விதிமுறைகளின்படி தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் பிரகாசம் உள்பட அரசு அலுவலர்கள், ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story