மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கே வெற்றி என்ற நிலை உருவாகவேண்டும் கனிமொழி எம்.பி. பேச்சு
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கே வெற்றி என்ற நிலை உருவாகவேண்டும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
தூத்துக்குடி,
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கே வெற்றி என்ற நிலை உருவாகவேண்டும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
ஊராட்சி சபை கூட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட டி.சவேரியார்புரத்தில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மக்கள் வேண்டாம் என்று கூறும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் போன்ற தொழில்களை திணித்துக் கொண்டு இருக்கிறார்கள். உடல்நலம், பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் திணிக்கிறார்கள். நாம் கேட்கக்கூடிய எதையும் அவர்கள் தர தயாராக இல்லை.
வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து வங்கிக்கணக்கில் போடுவதாக கூறினார். அந்த ரூ.15 லட்சம் பணத்தை கொடுத்து இருந்தால், யாரும் கடன் வாங்கவேண்டிய அவசியம் இருந்து இருக்காது.
தமிழனின் உரிமை
எல்லோரையும் அரவணைத்து வாழும் நாடு இந்தியா. ஆனால் இன்று பா.ஜனதா ஆட்சியில் மதம், சாதியின் பெயரால் எல்லாம் பிரித்து பார்க்கப்படுகிறது. பா.ஜனதா மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால், நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். இது ஒரு கலவர பூமியாக மாறிவிடும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் மத்தியில் பா.ஜனதா ஆட்சியை மறுபடியும் வரவிடக்கூடாது. மாநிலத்தில் மத்திய அரசுக்கு காவடி எடுத்துக் கொண்டு இருக்கக்கூடிய, பா.ஜனதாவில் இருப்பவர்களுக்கு பினாமியாக ஆட்சி நடத்திக் கொண்டு இருக்க கூடிய அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது. அது உங்கள் கையில் இருக்கிறது.
இடைத்தேர்தல் வருகிறது. அதனால் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடக்கூடிய, உங்கள் குறைகளை கேட்க ஓடோடி வரக்கூடிய, உங்களோடு நிற்கக்கூடிய தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். அதே நேரத்தில் மாநிலத்தில் மட்டுமின்றி, டெல்லியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம். டெல்லியில் ஒரு கூட்டணி ஆட்சியை உருவாக்குவோம். தமிழனின் உரிமையை, தமிழனின் குரலை மதிக்கக்கூடிய ஒரு ஆட்சியை உருவாக்குவோம்.
தி.மு.க.வுக்கே வெற்றி
மக்கள் நம் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை நிறைவேற்றித் தரும் இடத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு உழைக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி தி.மு.க.வுக்கே என்ற நிலை உருவாகவேண்டும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையே மாற்றும் நிலையை உருவாக்க வேண்டும். இந்த ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்சியை நாம் நினைத்தால் மாற்றி காட்ட முடியும். தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் விரைவில் உருவாக வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். தொடர்ந்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி தி.மு.க. அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரி சங்கர்,
தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, சண்முகையா, ஊராட்சி செயலாளர் சரவணக்குமார், டி.டி.சி.ராஜேந்திரன், கிளை செயலாளர் காமராஜ், முன்னாள் கிளை செயலாளர் நவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story