சேலத்தில் 2–வது நாளாக திரண்டனர்: தற்காலிக ஆசிரியர் பணியில் சேர 3 ஆயிரம் பேர் விண்ணப்பம்
சேலத்தில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். 2–வது நாளான நேற்று ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் திரண்டனர்.
சேலம்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (ஜாக்டோ–ஜியோ) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருசில பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பதிலாக மாணவ–மாணவிகளே பாடம் நடத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பணிக்கு வராத சுமார் 8 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆசிரியர்கள் பணிக்கு திரும்பும் வரை ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை பெற கடும் போட்டி நிலவி வருகிறது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஏராளமானோர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்தனர். அதாவது, தங்களது சுய விவரத்துடன் கல்வி சான்றிதழ்கள், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி போன்ற ஆவணங்களை இணைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்றாலும் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர ஆண்களும், பெண்களும் திரண்டு வந்திருந்தனர். பின்னர் அவர்கள், கல்வித்தகுதி, முகவரி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அதன் விவரம் உள்ளிட்டவைகளை எழுதி கல்வித்துறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை தற்காலிக ஆசிரியர் பணியில் சேருவதற்கு சுமார் 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை (அதாவது இன்று) பணிக்கு திரும்பாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட 18 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2 நாட்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர் பணிகளில் சேர சுமார் 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தற்காலிக ஆசிரியர் பணியில் சேர மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்களுடைய சுய விவரத்துடன் கல்வி சான்றிதழ்களை இணைத்து கொடுக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் பணியில் சேர்க்கப்படுவார்கள். அதேசமயம், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும் மாணவ–மாணவிகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்க அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.