மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் மீன்பிடி தொழில் மும்முரம்


மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் மீன்பிடி தொழில் மும்முரம்
x
தினத்தந்தி 28 Jan 2019 3:30 AM IST (Updated: 28 Jan 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் மீன்பிடி தொழில் மும்முரமாக நடைபெறுகிறது.

கொளத்தூர்,


சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதிகளில் மீன்பிடிப்பதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உரிமம் பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அணையின் மீன்வளம் தொடர்ந்து சரிந்து வந்ததால் மீனவர்கள் மீன்பிடி தொழிலின்றி பாதிப்படைந்தனர். இதனால் பல மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். மேலும் பல மீனவர்கள் விவசாய கூலிகளாகவும், கட்டிட கூலி தொழிலுக்கும் மாறினர்.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பியது. அப்போது பெரும்பாலான நீர்த்தேக்கப்பகுதிகளில் பயிரிடப்பட்ட கம்பு, சோளம் பயிர்கள் அறுவடை செய்யப்படாமலே தண்ணீரில் மூழ்கின. கர்நாடக அணைகளின் நீர்வரத்தின்போது வந்த மீன்கள் இந்த மூழ்கிய சோளப்பயிர்களில் மறைந்ததால் மீனவர்களின் வலைகளில் இந்த மீன்கள் பிடிபடாமல் இருந்தன. ஆதலால் மேட்டூர் அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் மீன்கள் பிடிபடுவது சிரமமாகி போனது.

இந்தநிலையில் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் சோளப்பயிர்களில் மறைந்து இருந்த மீன்கள் வெளிவர தொடங்கி உள்ளன. இதனால் மீனவர்கள் விரிக்கும் வலைகளில் கட்லா, ரோகு போன்ற முதல்தர மீன் வகைகளும், அரஞ்சான், வாளை போன்ற இரண்டாம் தர மீன்களும் பிடிபடுகின்றன.

இதனால் மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதிகளில் மீன்பிடி தொழில் மும்முரம் அடைந்துள்ளது. பிடிபடும் மீன்களை விற்பனை செய்த பிறகு எஞ்சியுள்ள மீன்களை கருவாட்டிற்காக மீனவர்கள் கரையோர பகுதிகளில் காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மீன், கருவாடு விற்பனை அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்தேக்கப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story