ஊத்துக்குளி அருகே சேலம் தொழில் அதிபர் விபத்தில் பலி நண்பர் படுகாயம்


ஊத்துக்குளி அருகே சேலம் தொழில் அதிபர் விபத்தில் பலி நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 28 Jan 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே கார் கவிழ்ந்து சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

ஊத்துக்குளி, 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் மணியன் (வயது 48). தொழில் அதிபரான இவர் கோவையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பனியன் நிறுவனம் நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது நண்பரான சேலத்தை சேர்ந்த நாகராஜ் (40) என்பவருடன் காரில் கோவை சென்றார். பின்னர் இருவரும் கோவையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்றனர். காரை மணியன் ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே நாகராஜ் அமர்ந்து இருந்தார்.

இவர்களுடைய கார், கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துக்குளியை அடுத்த செங்கப்பள்ளி பக்கம் உள்ள உணவு விடுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த குழியில் கார், இறங்கி திடீரென்று கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணியன் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த நாகராஜ் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story