கர்நாடகத்தில் நடைபெறும் 11 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி தனித்து போட்டி தேவேகவுடா அறிவிப்பு
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஜனதா தளம்(எஸ்) தனித்து போட்டி
ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளன. தொகுதி பங்கீடு குறித்த ேபச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்பட 11 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சிகளுக்கான இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிர்வாகிகள் ஆலோசனை
ஜனதா தளம்(எஸ்) சார்பில் பெங்களூரு நகர நாடாளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடை பெற்றது. அக்கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாநகராட்சி தேர்தல்
“பெலகாவி, உப்பள்ளி-தார்வார், மங்களூரு, மைசூரு, சிவமொக்கா, பெங்களூரு, கலபுரகி, துமகூரு, பல்லாரி, தாவணகெரே, விஜயாப்புரா ஆகிய 11 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநகராட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சியான காங்கிரசும், தனித்து போட்டியிடவே விரும்புகிறது. உள்ளூர் மட்டத்தில் உள்ள தொண்டர்கள், தனித்து போட்டியிட வேண்டும் என்று விரும்பு கிறார்கள். கட்சியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு மேயரை தேர்வு செய்வதில் காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு...
நாடாளுமன்ற தேர்தல், பெங்களூரு மாநகராட்சி தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். முன்பு பெங்களூருவில் எங்கள் கட்சி பலமாக இருந்தது. மாநகராட்சியில் 8 ஆண்டுகள் நிர்வாகத்தை நடத்தினோம்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டில் அடுத்து யார் பிரதமராக உள்ளார் என்பது முக்கியமல்ல. நிலையான ஆட்சியை வழங்க வேண்டியது தான் முக்கியம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துக்கொள்வது நல்லது.
நல்லாட்சியை வழங்க...
அதன் மூலம் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மத்தியில் ஆட்சியை நடத்தவும் முடியும். கர்நாடக கூட்டணி அரசு கவிழ்ந்து விடும் என்று அடிக்கடி கூறுவது சரியல்ல. கர்நாடகத்தில் கூட்டணி அரசு நிலையான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. நல்லாட்சியை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.”
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story