போலி இறப்புச் சான்றிதழ் மூலம் ரூ.81 லட்சம் இன்சூரன்ஸ் மோசடி டாக்டர்கள் உள்பட 6 பேர் கைது


போலி இறப்புச் சான்றிதழ் மூலம் ரூ.81 லட்சம் இன்சூரன்ஸ் மோசடி டாக்டர்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2019 5:00 AM IST (Updated: 28 Jan 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

போலி இறப்புச் சான்றிதழ் மூலம் ரூ.81 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை வாங்கி மோசடி செய்த டாக்டர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே, 

போலி இறப்புச் சான்றிதழ் மூலம் ரூ.81 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை வாங்கி மோசடி செய்த டாக்டர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலி இறப்புச்சான்றிதழ்

தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் சந்திரகாந்த் ஷிண்டே. இவரது உறவினர்களான நாராயண் ஷிண்டே, அவரது மனைவி லட்சுமி ஷிண்டே ஆகியோர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு செய்திருந்தனர்.

இந்தநிலையில், உயிரோடு இருக்கும் அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக சந்திரகாந்த் ஷிண்டே போலி இறப்பு சான்றிதழ் மூலம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.81 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கு நாராயண் ஷிண்டே, அவரது மனைவி லட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுபற்றி போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரகாந்த் ஷிண்டேயை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையின் போது, இறப்பு சான்றிதழ்களை மும்ராவை சேர்ந்த டாக்டர்கள் அப்துல் மோகித் சித்திக்கி, இம்ரான் சித்தின் ஆகிய 2 பேர் தயாரித்து கொடுத்ததாக தெரிவித்தார். இதற்காக அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறினார்.

கைது

மேலும் இந்த மோசடியில் மாநகராட்சி மயான ஊழியர் தேஜ்பால் ராம்வீருக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சந்திரகாந்த் ஷிண்டேயிடம் இருந்து ரூ.15 ஆயிரம் வாங்கியிருக்கிறார்.

இதையடுத்து போலீசார் நாராயண் ஷிண்டே, அவரது மனைவி லட்சுமி ஷிண்டே, டாக்டர்கள் அப்துல் மோகித் சித்திக்கி, இம்ரான் சித்தின், மயான ஊழியர் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

கைதான டாக்டர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்கள் இதுவரை 13 போலி இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 10 இறப்பு சான்றிதழ்கள் உயிரோடு இருப்பவர்களுக்கு தயாரித்து கொடுத்து இருந்ததும் தெரியவந்தது.

இந்த மோசடியில் தானே மாநகராட்சி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story