கோவை மாநகரில் சிக்னல்களில் புதிய கண்காணிப்பு கேமராக்கள்


கோவை மாநகரில் சிக்னல்களில் புதிய கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 28 Jan 2019 5:27 AM IST (Updated: 28 Jan 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகரில் உள்ள சிக்னல்களில் பழைய கேமராக்களை அகற்றிவிட்டு புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அவை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை என்று போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

கோவை,

கோவை மாநகர பகுதியில் அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு ஆகியவை முக்கிய ரோடுகள் ஆகும். இந்த ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டுபிடிப்பதற்காகவும், குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிகுழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகர பகுதியில் போக்குவரத்தை எளிதில் கண்காணிப்பதற்காக கோவை மேற்கு, கோவை கிழக்கு என்று இருபிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் கோவை மேற்கு பகுதியில் 28 சிக்னல் களும், கிழக்கு பகுதியில் 28 சிக்னல்களும் உள்ளன. இதுதவிர மஞ்சள் விளக்குகள் மட்டும் ஒளிரக்கூடிய சிக்னல்கள் பல உள்ளன.

இந்த சிக்னல்களில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் கோவை அவினாசி ரோடு எல்.ஐ.சி. சிக்னல், அண்ணா சிலை சிக்னல், லட்சுமி மில் சிக்னல் உள்பட 5 சிக்னல்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்து பழுதாகி விட்டன.

அந்த சிக்னல்களில் இருந்த பழைய கண்காணிப்பு கேமராக்களை அகற்றிவிட்டு புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அந்த கேமராக்கள் மிகவும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

புதிய கண்காணிப்பு கேமராக்களும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப் பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் புதிதாக சிக்னல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story