சாதிக்பாட்ஷா, அண்ணாநகர் ரமேஷ் மரணத்தில் மர்மம் நீடிப்பதால் சி.பி.ஐ. விசாரணை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வலியுறுத்தல்
‘சாதிக்பாட்ஷா, அண்ணாநகர் ரமேஷ் மரணத்தில் மர்மம் நீடிப்பதால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்‘ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் வி.மருதராஜ் தலைமை தாங்கி பேசினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியை ஒழிக்க தினமும் போராட்டம், நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு என எத்தனையோ முயற்சிகள் நடக்கின்றன. டி.டி.வி.தினகரன் 6 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று 2 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். அவர் தனது சின்னம்மாவுடன் சேர்ந்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற எத்தனையோ முயற்சி செய்தார். அனைத்தையும் கடந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அ.தி.மு.க. எப்பவும் தயாராக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு சரியாக வழங்கவில்லை என்று கூறி தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதனால் 2½ ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தினாலும் தடை கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு, மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வும் தான் காரணம். மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் முதல்-அமைச்சராகி விடலாம் என்ற கனவில் அவர் மிதக்கிறார். ஆனால் அந்த கனவு நிறைவேறாது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்கிறார். தாராளமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தட்டும்.
2-ஜி வழக்கு விசாரணை நடந்தபோது சாதிக்பாட்சா மர்மமாக இறந்தார். இதேபோல் அண்ணாநகர் ரமேஷ் மரணத்திலும் மர்மம் உள்ளது. இவ்விரு வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான், யார் சிக்குவார்கள் என்பது தெரியவரும்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. தேர்தல் அறிவித்ததும் கூட்டணிகள் அமையலாம். ஆனால், ஜெயலலிதா வழியில் தேர்தலை தனியாக சந்திப்பது என்ற சிந்தனையில் இருக்கிறோம். மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதில் ஏற்படும் தாமதம் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டினார். அதை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கிறேன்.
கூட்டத்தில் பரமசிவம் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் வாசுகி, பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, துளசிராம், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மற்றும் சார்பு அண நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story