திருக்கனூர் மதுக்கடை மீது வெடிகுண்டுகள் வீசிய வழக்கு திண்டிவனம் கோர்ட்டில் 2 பேர் சரண்
திருக்கனூர் மதுக்கடை மீது வெடிகுண்டுகள் வீசிய வழக்கில் தேடப்பட்ட 2 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
திண்டிவனம்,
புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் தனியார் மதுபான கடை உள்ளது. இந்த கடையின் விற்பனையாளர் கடந்த 23-ந்தேதி இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென்று 2 நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடை மீது வீசி விட்டு சென்றனர்.
அந்த வெடிகுண்டுகள் கடையின் ஷட்டரில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. கடையின் ஷட்டர் மட்டும் சேதமடைந்தது. இதுகுறித்து திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மதுபான கடையை பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் மதுக்கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் வெடிகுண்டு வீசி சென்றவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் மூலம் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தியதில், புதுச்சேரி சொர்க்கபுரிநத்தத்தை சேர்ந்த சுந்தரம் மகன் கார்த்திகேயன்(வயது 23), தகடப்பட்டை சேர்ந்த மொட்டையன் மகன் சிவராமகிருஷ்ணன்(28), பி.எஸ்.பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் மகேசுவரன்(23) ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கனூர் போலீசார் கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த 2 பேரை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சிவராமகிருஷ்ணன், மகேசுவரன் ஆகியோர் நேற்று காலை திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 மாஜிஸ்திரேட்டு வீரண்ணன் முன்னிலையில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story