அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தச்சு தொழிலாளி குத்திக்கொலை அண்ணன் போலீசில் சரண்


அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தச்சு தொழிலாளி குத்திக்கொலை அண்ணன் போலீசில் சரண்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:15 AM IST (Updated: 28 Jan 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தச்சு தொழிலாளியை அண்ணன் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்தார்.

ஓசூர்,

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரி கோட்டை தெருவை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 31), கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய தம்பி நாகராஜ் (28). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரும் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

நாகராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் மது குடித்து விட்டு வந்து தனது அண்ணியிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இது குறித்து அவர் தனது கணவர் மாதப்பனிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர், நாகராஜை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நாகராஜ் மது குடித்து விட்டு மாதப்பனின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர் தனது அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தனது கணவர் மாதப்பனிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மாதப்பன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நாகராஜை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து மாதப்பன் நடந்த சம்பவத்தை கூறி சூளகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக மாதப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தச்சு தொழிலாளியை, அண்ணனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story