டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்


டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:00 AM IST (Updated: 28 Jan 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர், 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அணையில் நீர்இருப்பு குறைவாக இருந்தது. இதன் காரணமாக குறிப்பிட்ட தேதியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

அதன்பின்னர் ஜூலை 23-ந்தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடந்த ஆண்டை பொறுத்தவரை காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குறுவை சாகுபடி முழுமையாக நடைபெறவில்லை. சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெற்றுள்ளது. இவ்வாறு பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் ஜனவரி 28-ந்தேதியுடன் நிறுத்தப்படுவது வழக்கம்.

இதன்படி ஜனவரி 28-ந்தேதியான நேற்று மாலையுடன் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 23-ந்தேதி முதல் நேற்று மாலை வரை டெல்டா பாசனத்துக்காக சுமார் 210 டி.எம்.சி.க்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதன் மூலம் மேட்டூர் அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின்நிலையங்கள் மூலம் நடைபெற்று வந்த மின்உற்பத்தியும் நடைபெறவில்லை.

அணை நீர்மட்டம் நேற்று மாலை 70.81 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் குறைந்ததால் அணை நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலய கோபுரம், ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை ஆகியவை வெளியே தெரிகிறது.

Next Story