கிருஷ்ணகிரி நகரில் பெட்டிக்கடைகளில் மது விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


கிருஷ்ணகிரி நகரில் பெட்டிக்கடைகளில் மது விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Jan 2019 4:00 AM IST (Updated: 28 Jan 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி நகரில் குடியிருப்பு பகுதிகளில் பெட்டிக்கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, 

தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோவில்கள், பள்ளிகள் அருகில் மதுக்கடைகள் இருக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் மாற்றப்பட்டன. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் நகர் பகுதியில் இருந்த பல மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டன.

காட்டிநாயனப்பள்ளி, பழைய பஸ் நிலையம் அருகில் என சில இடங்களில் மட்டும் மதுக்கடைகள் உள்ளன. இது ஒருபுறமிருக்க கிருஷ்ணகிரி நகரில் அனுமதியின்றி மது விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக பெட்டிக்கடைகளில் மது விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும், இதனால் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரியில் கிட்டம்பட்டி கூட்டு ரோடு அம்மன் நகரில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் சில பெட்டிக்கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த கடைகளில் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரையில் மது பிரியர்கள் பலரும் மது வாங்க வருகிறார்கள். ஒவ்வொரு மதுபாட்டில்கள் மீதும் கூடுதலாக 20 முதல் 30 ரூபாய் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

அவ்வாறு மது வாங்க வருபவர்கள் மது குடித்து, அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளின் வாசலிலேயே படுத்து தூங்குவதாகவும், இதனால் வெளியே வரவே அச்சமாக உள்ளதாகவும் அந்த பகுதியில் உள்ள பெண்கள் பலரும் புகார் தெரிவித்தனர். இதே போல கிருஷ்ணகிரியில் டவுன் பகுதியில் தியேட்டர் அருகில் உள்ள சில பெட்டிக்கடைகளில் கர்நாடக மாநில மது வகைகள் விற்பனை ஜோராக நடந்து வருகின்றன.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் உள்ள சில தாபா ஓட்டல்கள், சேலம் பை-பாஸ் சாலையில் உள்ள சில தாபா ஓட்டல்களில் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மது விற்பனை நடைபெறுவதால் பலரும் மது குடித்து விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே கிருஷ்ணகிரி நகரில் அனுமதியின்றி நடைபெறும் மது விற்பனையை தடுத்திட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story