அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பும், பின்பும் விற்பனை: முறைகேடாக மது விற்பதால் அதிகரிக்கும் குற்றங்கள்


அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பும், பின்பும் விற்பனை: முறைகேடாக மது விற்பதால் அதிகரிக்கும் குற்றங்கள்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:15 AM IST (Updated: 29 Jan 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

முறைகேடான மது விற்பதால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பும், பின்பும் மது விற்பனை நடைபெறுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மதுபானக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தினாலும், மது விற்பனை மட்டும் நாளுக்கு நாள் அதிரித்துக்கொண்டே வருகின்றன. தமிழகத்தில் 5 ஆயிரத்து 140 டாஸ்மாக்கடைகள் தற்போது இயங்கி வருகின்றன.

மது குடிப்போர்களின் எண்ணிக்கையும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் பெரியவர்கள் தான் அதிக அளவில் குடித்து வந்தனர். ஆனால் தற்போது பள்ளி செல்லும் மாணவர்களே குடிக்கத்தொடங்கி விட்டனர். இளைஞர்கள், சிறுவர்கள் மட்டுமல்லாது பெண்களும் கூட மது குடிக்கத்தொடங்கி விட்டனர் என்பதை பார்க்கும்போது நமது நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரம் ஆகியவை கேள்விக்குறியாகி வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 151 கடைகளும், நாகை மாவட்டத்தில் 96 கடைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 100 கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதில் பெரும்பாலான கடைகள் குறிப்பிட்ட நேரங்களுக்கு முன்னதாகவே திறக்கப் படுகின்றன.

ஒருசில கடைகளில், மூடப்பட்ட பின்னர்தான் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருகின்றன. பூட்டப்பட்ட கடைகளின் முன்பு வாகனங்களை நிறுத்திக்கொண்டு மது விற்பனையை அமோகமாக நடத்தி வருகிறார்கள். பல இடங்களில் 12 மணி என்பதற்கு பதிலாக காலையிலேயே திறந்து விற்பனை செய்கிறார்கள். தற்போது முறைகேடாக மது விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது.

ஒரு சில கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்கிறார்கள். இந்த மதுக்கடைகள் சாலையோரங்களில் இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கடையின் முன்பும், எம்.கே.மூப்பனார் ரோட்டில் உள் கடையின் முன்பும் மதுகுடிக்க வருபவர்களின் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் அந்த வழியாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த கடைகள் அமைந்துள்ள ரோடுகளில் நடந்து செல்வதற்கு பெண்கள், பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

அரசு அறிவித்துள்ள நேரத்தை மீறி முறைகேடாக மது விற்பனை செய்யப் படுவதன் மூலம் குற்ற சம்பவங்களும் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வதால் பள்ளி செல்லும் மாணவர்கள் கூட மதுவை வாங்கி அருந்தும் நிலை ஆங்காங்கே காணப்படுகிறது. இரவு 10 மணி வரை தெருக்களில் ஆள் நடமாட்டம் உள்ளது. அதன் பின்னர் வருபவர்களுக்கும் மது சப்ளை செய்யப்படுவதால் அதை வாங்கி அருந்துபவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. தஞ்சை மாநகரில் செயல்படும் பல டாஸ்மாக்கடைகள் முன்பு, அல்லது அதன் அருகே அல்லது டாஸ்மாக் கடை பார்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுகிறது.

அதிலும் குறிப்பாக 2 அல்லது 3 பேர் சேர்ந்து கொண்டு மது அருந்தி விட்டு ஆள்நடமாட்டம் குறைந்த பகுதி அல்லது, இருள் சூழ்ந்த பகுதியில் நின்று கொண்டு அந்த வழியாக செல்வோரை மிரட்டி பணம், செல்போனை பறித்து சென்று விடுகிறார்கள். சில நேரங்களில் கொடுக்க மறுப்பவர்களை அடித்து உதைத்து காயப்படுத்தி விட்டு பறித்துச் சென்று விடுகிறார்கள்.

மேலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் விபத்துகளை ஏற்படுத்துவதாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்கிறார்கள். சில நேரங்களில் குடித்து விட்டு வருபவர்கள் பெண்களை கேலி, கிண்டல் செய்வதால் அவர்கள் மனதளவிலும் பாதிக்கப்படுகிறார்கள்.

குடிப்பதற்கு பணம் இல்லையென்றால் வழிப்பறி செய்யும் நிலைக்கு மதுகுடிப்பவர்கள் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு போலீசாரிடம் சிக்குபவர்கள், தாங்கள் எந்த பகுதியில் யாரிடம் செல்போன், பணத்தை பறித்தோம், யாரிடம் விற்றோம் என்று கூட தெரியாத அளவிற்கு போதையில் அவர்கள் வலம் வருகிறார்கள். முன்பெல்லாம் குற்ற செயல்கள் நடந்தால், எந்த வகையில் நடந்தது என பார்த்து, அதை எந்த குற்றவாளிகள் செய்து இருப்பார்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள்.

ஆனால் தற்போது அப்படி இல்லை. மது குடிக்க பணம் இல்லையென்றால் போதும். உடனே குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். அவ்வாறு செய்பவர்கள் பெரும்பாலும் போலீசாரிடம் சிக்குவது இல்லை. ஒரு சில நேரங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சிக்கினாலும் எந்தவித பிரயோஜனமும் இல்லாத நிலை தான் உள்ளது. இதனால் போலீசாருக்கு தலைவலி ஏற்படுகிறது. திருட்டு போன செல்போன், நகையை பறி கொடுத்தவர்களுக்கு அதை மீட்டு கொடுப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு முறைகேடாக மது விற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தாலும் குற்றச்செயல்கள் பாதி குறைந்து விடும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story