திருபுவனத்தில், பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்: ஜவுளிக்கடை உரிமையாளர் கைது


திருபுவனத்தில், பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்: ஜவுளிக்கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனத்தில், பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜவுளிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் 21 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த ஆண்டு(2018) நவம்பர் மாதம் 7-ந் தேதி சிலர் கூட்டு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜவுளிக்கடையில் வேலை பார்த்த பெண் ஒருவரை சிலர் கூட்டு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருபுவனத்தில் போராட்டங்களும் நடைபெற்று வந்தன.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்க்கா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பா (வயது42), மைதீன் (38) மற்றும் அந்த பெண் வேலை பார்த்து வந்த ஜவுளிக் கடையின் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சின்னப்பா, மைதீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

வழக்கில் தொடர்புடைய ஜவுளிக்கடையின் உரிமையாளர் கார்த்திக்(29) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசாருக்கு கார்த்திக் சென்னையில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கார்த்திக்கை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Next Story