அம்மையப்பனில் புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்


அம்மையப்பனில் புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:15 AM IST (Updated: 29 Jan 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

புயல் நிவாரணம் வழங்கக்கோரி அம்மையப்பனில் கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன், ஆனைவடபாதி உள்ளிட்ட கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கப்பட வில்லை. புயலில் கூரை வீடு மற்றும் ஓட்டு வீடுகளை இழந்தவர்கள் நிவாரண தொகை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள். சில கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகங்கள் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் புயல் நிவாரணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மையப்பன் கடைவீதியில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வெங்கடேசன், சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தவில்லை என உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர். அதிகாரிகளை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன. புயல் நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story