பவானி அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


பவானி அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 29 Jan 2019 3:30 AM IST (Updated: 29 Jan 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

எங்களுக்கு கடந்த 2014–ம் ஆண்டு அண்ணாநகர் பகுதியில் அரசு சார்பில் இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் 30 குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். வனவிலங்குகளுக்கு பயந்து இரவு நேரங்களில் அங்கு தங்குவதில்லை. வேறு இடத்துக்கு சென்றுவிடுவோம்.

எங்கள் அனைவருக்கும் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர வேண்டும் என்று பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் எங்கள் பகுதியில் கழிப்பறை, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே எங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து, அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

பவானி பகுதியை சேர்ந்த ஜமுக்காளம் வியாபாரி வாசுதேவன் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘எனக்கு சொந்தமான வீடு பவானி நடராஜபுரம் காலனியில் இருந்தது. இந்த வீட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு விற்பனை செய்தேன். ரூ.43 லட்சம் தந்துள்ளார். மீதமுள்ள ரூ.97 லட்சத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கிறார். எனவே எனக்கு தரவேண்டிய ரூ.97 லட்சத்தை உடனடியாக தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் எனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை’ என்று கூறி இருந்தார்.

பவானி அருகே உள்ள மயிலம்பாடி கிராமத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

சித்தோடு கோணவாய்க்கால்பிரிவு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை, தற்போது பவானி மயிலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட போத்தநாயக்கன்புதூரில் நெடுஞ்சாலை ஓரம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போத்தநாயக்கன்புதூரை சுற்றி சுமார் 1,000 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மேலும் இந்த பகுதியில் தொடக்க பள்ளிக்கூடமும், மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமும் இயங்கி வருகிறது.

இதனால் இந்த பகுதியில் எப்போதும் பெண்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே மேற்படி இடத்தில் டாஸ்மாக் கடை வந்தால் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும். மேலும் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் அச்சத்துடன் செல்லவேண்டிய சூழ்நிலையும் உருவாகும். எனவே போத்தநாயக்கன்புதூரில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த மாராள் என்பவர் தனது உறவினர்கள் சிலருடன் வந்து, கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

எனது மகன் கோபாலன் (வயது 32), எங்கள் பகுதியை சேர்ந்த சிலருடன் வெளியில் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அவனுடன் சென்ற இளைஞர் ஒருவரிடம் எனது மகன் எங்கே? என்று கேட்டேன். அப்போது அந்த இளைஞர் அணிந்திருந்த சட்டையில் ரத்தக்கறையும், சேறும் படிந்திருந்தது. மேலும் அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாகவும் பதில் கூறினார். இந்த நிலையில் எனது மகன் செட்டிபாளையம் வாய்க்கால் கரை ஓரம் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தான். எனவே அந்த இளைஞர் தான் சிலருடன் சேர்ந்து எனது மகனை கொலை செய்து வாய்க்காலில் வீசி உள்ளார். எனவே அந்த இளைஞரை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் பூங்கா மற்றும் கோவில் கட்ட இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் போலீஸ் நிலையம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

சிவகிரி தொழில் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வணிக கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் தொழில் நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பரிசீலனை செய்து சொத்து வரியை குறைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன், மரம் ஏறும் உபகரணங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர் மரம் ஏறும் உபகரணங்களை வெளியில் வைத்து விட்டு கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், ‘பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 218 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சி.கதிரவன், அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி, மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராமன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story