தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்


தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:00 AM IST (Updated: 29 Jan 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தர்மபுரி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மாணவ-மாணவிகள், பொதுமக்களின் நலன்கருதி போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரிய, ஆசிரியைகள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. இதையடுத்து போராட்டத்தை முன்நின்று நடத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் (ஜாக்டோ-ஜியோ) நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 5,740 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இது மாவட்டத்தில் பணிபுரியும் மொத்த ஆசிரிய, ஆசிரியைகளில் 67.10 சதவீதம் ஆகும். தொடக்கபள்ளி ஆசிரிய, ஆசிரியைகளில் 87.48 சதவீதம் பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் நேற்று மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. வகுப்பறைகள் பூட்டப்பட்டு இருந்ததால் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம், கூட்டமாக வந்து விண்ணப்பங்களை அளித்தனர். நேற்று மாலை வரை மொத்தம் 3,800 விண்ணப்பங்கள் குவிந்தன.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் 19 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். இந்த நிலையில் கூடுதலாக 8 ஆசிரியர்கள் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story