மத்தூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டு சென்ற பிரமாண்ட பெருமாள் சிலை


மத்தூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டு சென்ற பிரமாண்ட பெருமாள் சிலை
x
தினத்தந்தி 29 Jan 2019 3:45 AM IST (Updated: 29 Jan 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி பிரமாண்ட பெருமாள் சிலை புறப்பட்டு சென்றது.

கிருஷ்ணகிரி, 

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வைப்பதற்காக திருவண்ணாமலை அருகே சுமார் 370 டன் எடை கொண்ட பிரமாண்டமான பெருமாள் சிலை தயார் செய்யப்பட்டது. இந்த சிலை பல்வேறு ஊர்களை கடந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வழியாக நேற்று முன்தினம் போச்சம்பள்ளி வந்தது.

போச்சம்பள்ளியில் இருந்து பெருமாள் சிலை பெங்களூரு - புதுச்சேரி சாலையில் செல்வதற்காக மத்தூரை நோக்கி வந்தது. தர்மபுரி பை-பாஸ் சாலையில் அந்த பெருமாள் சிலையை லாரி மூலமாக கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் அதை இழுப்பதற்காக சிறப்பு பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பெருமாள் சிலை சிறிது நேரம் இழுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெருமாள் சிலை மத்தூர் பஸ் நிலையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று காலை வரையில் மத்தூர் பகுதியிலேயே சிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் அங்கு வந்து பெருமாளை வழிபட்டனர். இந்த நிலையில் மத்தூரில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ராட்சத லாரியின் 4 டயர்கள் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

இதைத்தொடர்ந்து புதிய டயர்கள் பொருத்தப்பட்டு அந்த பெருமாள் சிலை கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டு சென்றது. நேற்று மாலை அந்த பெருமாள் சிலை பெருகோபனப்பள்ளியை அடைந்தது.

இதற்கிடையே நேற்று அதிகாலை வேலூரில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி தர்மபுரி மாவட்டம் கடத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. தர்மபுரி பை-பாஸ் சாலையில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மாற்று சாலையில் செல்வதற்காக சிமெண்டு லாரியின் டிரைவர் லாரியை பின்புறமாக இயக்கினார். அப்போது லாரி எதிர்பாராதவிதமாக 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி டிரைவர் லேசான காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டனர்.

Next Story