திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு ஆசிரியர் வருகை 3 சதவீதமாக குறைந்தது
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை 3 சதவீதமாக குறைந்திருந்தது. அதே சமயம் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
திருப்பூர்,
ஜாக்டோ–ஜியோ போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 97 சதவீத ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் சுமார் 3 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் இருந்தனர்.
அந்த பள்ளிகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை ஏற்பாடு செய்யும்படி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டதன் பேரில் பகுதி நேர ஆசிரியர்கள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை வட்டார தொடக்ககல்வி அதிகாரிகள் வரவழைத்தனர். இருந்தாலும் அவர்கள் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கடும் சிரமப்பட்டனர். ஆசிரியர்கள் இல்லாததால் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களும் ஓடியாடி விளையாடி பொழுதை கழித்தனர்.
ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை நிபந்தனை அடிப்படையில் மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்ப படிவங்களை கொடுக்க கூட்டம் அலைமோதியது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட். பட்டதாரிகள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மிகவும் ஆர்வத்தோடு விண்ணப்பித்தனர்.
நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள், கல்வி மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்க வந்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில் ‘‘தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நேற்று முதல் பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிய ஆசிரியர்கள் யாரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும், விண்ணப்பிக்க வருபவர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை வாங்கி கொள்ளுங்கள்’’ என்றும் அறிவித்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 1,000 பேர் வரை விண்ணப்பம் கொடுத்துள்ளனர் என்றனர்.