திருப்பூரில் பட்டப்பகலில் துணிகரம் லிப்ட் கேட்பதுபோல் விவசாயியிடம் கத்திமுனையில் பணம்–நகை பறிப்பு
திருப்பூரில் பட்டப்பகலில் லிப்ட் கேட்பது போல் நடித்து விவசாயியிடம் கத்திமுனையில் பணம்–நகையை மர்ம ஆசாமிகள் துணிகரமாக பறித்து சென்றுள்ளனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் தாராபுரம் ரோடு தெற்கு அவினாசிபாளையத்தை அடுத்த வேலாயுதம்பாஷலளயம் வேலங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது 54). விவசாயி. இவர் கடந்த 22–ந்தேதி திருப்பூர் அவினாசி ரோடு தண்ணீர்பந்தல் காலனி சந்திப்பு அருகே காரில் சென்ற போது 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 பேர் கொண்ட கும்பல் அவருடைய காரை மறித்துள்ளனர். இவரும் காரை நிறுத்தி என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அப்போது அந்த கும்பல் அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டால் உதவியாக இருக்கும் என்றும் கூறி உள்ளனர். இதை நம்பிய நமச்சிவாயம் அந்த 4 பேரையும் காரில் ஏற்றி கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்துள்ளார். சிறிது நேரத்தில் 4 பேரில் ஒருவர் நமச்சிவாயத்திடம் கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த 2 மோதிரங்கள் மற்றும் பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்து போன நமச்சிவாயம் தன்னுடைய 2 மோதிரங்களையும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தையும் அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அவர் காரில் இருந்து இறங்கி ஓடி விட்டனர். இதுகுறித்து நமச்சிவாயம் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவருடைய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் நமச்சிவாயத்திடம் கத்தி முனையில் பணம் மற்றும் நகையை பறித்து சென்றது சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த கதிர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. திருப்பூரில் பட்டப்பகலில் லிப்ட் கேட்பது போல் நடித்து விவசாயியிடம் கத்தி முனையில் பணம்–நகையை 4 பேர் கொண்ட கும்பல் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.