9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஜாக்டோ–ஜியோ கூட்டுக்குழுவினர் சாலை மறியல் 3,800 பேர் கைது


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஜாக்டோ–ஜியோ கூட்டுக்குழுவினர் சாலை மறியல் 3,800 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ கூட்டுக்குழுவினர் 3,800 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டுக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் விடுமுறை தினங்கள் என்பதால் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மீண்டும் போராட்டம் நடத்த போவதாக ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர். அறிவிப்பை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் காலையில் இருந்தே ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடினார்கள். பின்னர் மாநில அரசுக்கு எதிராகவும், ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் கைது மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்புறம் பல்லடம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள்.

அதற்கு மறுப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். சிலரை குண்டுகட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் சமரசத்தை அடுத்து தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, உடுமலை கலை கல்லூரியை சேர்ந்த ஊழியர் சண்முகம்(வயது 45) என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து அவரை மீட்ட உடன் இருந்தவர்கள், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன்படி ஆண்கள், பெண்கள் என மொத்தம் 3,800 பேரை போலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 5 மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஜாக்டோ–ஜியோ அமைப்பின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக ஆசிரியர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களும் பெருமளவில் ஈடுபட்டு வருவதால் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர். இதன்படி தாசில்தார் அலுவலகம், கிராமநிர்வாக அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பல்வேறு துறை அரசு அலுவலகங்களிலும் குறைவான ஊழியர்களே வந்திருந்தனர். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது. சான்றிதழ்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட தங்கள் தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை தேடி வந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story