தங்கும் விடுதியில் இருந்து தப்பிய பள்ளி மாணவி கார் மோதி சாவு போலீசார் விசாரணை


தங்கும் விடுதியில் இருந்து தப்பிய பள்ளி மாணவி கார் மோதி சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Jan 2019 3:15 AM IST (Updated: 29 Jan 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே தங்கும் விடுதியில் இருந்து தப்பிய அரசு பள்ளி மாணவி கார் மோதி பலியானாள்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாலா (வயது 12). பாத்தகோட்டா பகுதியை சேர்ந்த அஞ்சலி (12) என்ற மாணவிகள் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் பள்ளியின் தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மாணவிகள் மாலா, அஞ்சலி இருவரும் விடுதியில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓசூர்-கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு ஓடி வந்தனர்.

இதையொட்டி தங்களை யாரும் பார்த்து விடக்கூடாது என பதற்றத்துடன் இருந்த மாணவிகள் இருவரும் அந்த தேசிய நெடுஞ்சாலையை வேகமாக கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தாள்.

அஞ்சலிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவளை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் இறந்த மாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கும் விடுதியில் இருந்து தப்பிய மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story