தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சரக்கு ரெயிலில் அடிபட்டு ஊழியர் சாவு என்ஜினில் சிக்கியிருந்த தலை 2 நாட்களுக்கு பிறகு மீட்பு
தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சரக்கு ரெயிலில் அடிபட்டு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிக்கமகளூரு,
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் அருகே மாஸ்தி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் தாவணகெரேயில் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி மகேஷ், தாவணகெரே அருகே தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் ஒன்று, மகேஷ் மீது மோதியது. இதில், ரெயிலின் சக்கரத்தில் சிக்கிக் கொண்ட அவர், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து தாவணகெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்தப்பகுதியில் மகேசின் உடல் மட்டும் கிடந்தது. தலை இல்லை. போலீசார் அந்தப்பகுதியை சுற்றி தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவருடைய தலை கிடைக்கவில்லை.
தலை மீட்பு
இதையடுத்து போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பீரூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு சரக்கு ரெயில் வந்தது. அப்போது அந்த சரக்கு ரெயிலின் என்ஜினை ரெயில்வே ஊழியர்கள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில், சரக்கு ரெயிலின் என்ஜினில் மகேசின் தலை சிக்கியிருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மகேசின் தலையை மீட்டு தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 நாட்களுக்கு பிறகு அவருடைய தலை மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தாவணகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story