புதுவையில் துணிகரம்: டாக்டர் வீட்டில் 150 பவுன் நகைகள்–பணம் கொள்ளை


புதுவையில் துணிகரம்: டாக்டர் வீட்டில் 150 பவுன் நகைகள்–பணம் கொள்ளை
x
தினத்தந்தி 29 Jan 2019 3:30 AM IST (Updated: 29 Jan 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் டாக்டர் வீட்டில் புகுந்து 150 பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரை சேர்ந்தவர் வடிவேல் பண்டாரி(வயது 67) டாக்டர். கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களும் டாக்டர்கள் ஆவார்கள். வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். வடிவேலு பண்டாரி தனது குடும்பத்துக்காக வாங்கி இருந்த நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.

பொங்கல் பண்டிகையையொட்டி அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்து புதுவைக்கு வந்து இருந்தனர். இதையொட்டி வங்கி லாக்கரில் இருந்து நகைகளை வடிவேலு பண்டாரி எடுத்து வந்தார். பொங்கல் பண்டிகை முடிந்ததும் அவர்கள் அனைவரும் வெளிநாடு சென்று விட்டனர். மீண்டும் நகைகளை வங்கி லாக்கரில் வைக்க திட்டமிட்டு இருந்தார். இந்தநிலையில் நகைகள் அனைத்தும் வீட்டிலேயே இருந்தன.

இவரது வீடு 3 மாடி கொண்டதாகும். தரை தளத்தில் உள்ள வீடு காலியாக உள்ளது. முதல் மாடியில் டாக்டர் வடிவேல் பண்டாரி வசித்து வருகிறார். 2–வது தளத்தில் உள்ள வீடு காலியாக உள்ளது. தரைதளம் மற்றும் 2–வது தளம் வாடகைக்கு விடப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 26–ந் தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு வடிவேல்பண்டாரி தனது மனைவியுடன் கடலூரில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கிருந்து நள்ளிரவில் வடிவேல் பண்டாரியும் அவரது மனைவியும் வீடு திரும்பினர். வந்த உடன் அவர்கள் தூங்கச் சென்று விட்டனர். நேற்று முன்தினம் அதிகாலை கழிவறைக்கு செல்வதற்காக வடிவேல் பண்டாரி எழுந்தார்.

அப்போது வீட்டில் நகை மற்றும் ரொக்கம் வைத்திருந்த அறையில் பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தார். அப்போது நகைகள் வைத்திருந்த பெட்டிகள் வெளியே சிதறிக் கிடந்தன. அதில் இருந்து சுமார் 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.2லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கடலூருக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து அறையில் மறைவான இடத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகள், பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் டாக்டர் வடிவேல் பண்டாரி புகார் செய்தார். உடனே வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை நடத்த வீட்டின் பால்கனியில் ஒரு கதவு உள்ளது. அதன் அருகில் உள்ள ஜன்னல் வழியே கையை விட்டு கதவை திறந்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகை–பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையடித்த பின் மீண்டும் அந்த வழியாகவே வெளியே வந்து அந்த கதவை மூடி வைத்து விட்டு சென்றுள்ளனர். கதவை உடைக்காமல் சாவி இருக்கும் இடத்தை தெரிந்து கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். எனவே டாக்டரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள், அவரது உறவினர்கள் யாருக்காவது இதில் தொடர்பு இருக்கலாம், அல்லது அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story