சேலத்தில், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் ஆலையை மாற்றக்கோரி சாலைமறியல் போலீசாருடன் வாக்குவாதம்; 23 பேர் கைது


சேலத்தில், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் ஆலையை மாற்றக்கோரி சாலைமறியல் போலீசாருடன் வாக்குவாதம்; 23 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2019 3:45 AM IST (Updated: 29 Jan 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் ஆலையை மாற்றக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் மரவனேரி கோர்ட்டு ரோட்டில் காக்கையன் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு அருகே மாநகராட்சி சார்பில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்றுநோய் ஏற்படுவதாகவும் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே இந்த ஆலையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அந்த ஆலையில் உரம் தயாரிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் அந்த ஆலையில் மீண்டும் உரம் தயாரிக்கும் பணி தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிள்ளையார் நகர், பிரபு நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அணைமேடு பஸ்நிறுத்தம் அருகே நேற்று காலை திரண்டனர். பின்னர் அவர்கள் உரம் தயாரிக்கும் ஆலையை மாற்றக்கோரி திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம், சாலையில் இருந்து ஓரமாக வாருங்கள், பேசிக்கொள்ளலாம், என்றனர். ஆனால் அவர்கள் இந்த பிரச்சினைக்கு முடிவு தெரியும் வரை வரமாட்டோம், என்றனர்.

இதையடுத்து போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறும் போது, ‘குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் ஆலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் வீட்டில் வசிக்க முடியவில்லை. ஈக்கள் மொய்ப்பதால் நிம்மதியாக சாப்பிடக்கூட முடியவில்லை‘ என்றனர். இதற்கு அதிகாரிகள், ஈக்கள் மொய்க்காத வகையிலும், துர்நாற்றம் வீசாத வகையிலும் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது‘ என்றனர்.

இதற்கு அவர்கள், பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து இந்த ஆலையை வேறு ஒரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள், ஆணையாளர் வெளியூர் சென்றிருப்பதால் வந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றனர்.

மீண்டும் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்து சங்கர் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

Next Story