சிவகாசி நகராட்சி பகுதியில் 25 வார்டுகளில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்


சிவகாசி நகராட்சி பகுதியில் 25 வார்டுகளில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:00 AM IST (Updated: 29 Jan 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 25 வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பூமிபூஜையில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

சிவகாசி,

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட 25 வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. தனியார் பங்களிப்புடன் செய்யப்படும் இந்த பணிக்கு தலா ரூ.15 லட்சம் செலவிடப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று காலை 6–வது வார்டில் உள்ள அண்ணாநகரில் நடந்தது.

இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அம்மன்கோவில்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து அம்பேத்கர் மணி மண்படத்தின் அருகில் கட்டப்பட்டு வரும் பசுமை உரக்கிடங்கை பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து விளாம்பட்டி ரோட்டில் அமைக்கப்பட இருந்த பசுமை உரக்குடிலை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள மக்கள் ஊருணியில் பசுமை உரக்குடில் அமைத்தால் பாதிப்பு வரும் என்று கூறினர். இதை தொடர்ந்து இந்த பகுதியில் அமைக்க இருந்த உரக்குடிலை வேறு இடத்தில் மாற்றி அமைக்க உத்தரவிட்டார். இதை பொதுமக்கள் கைதட்டி வரவேற்றனர். இதே போல் வெள்ளையாபுரம் ரோட்டில் நகராட்சி பூங்காவில் அமைக்கப்பட இருந்த பசுமை உரக் குடிலை பார்வையிட சென்றபோது அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குடியிருப்பு பகுதியில் உரக்குடில் அமைத்தால் எங்களுக்கு பாதிப்பு வரும் என்றும், தற்போது உள்ளது போல் இந்த இடம் தொடர்ந்து பூங்காவாக பராமரிக்க வேண்டும். அல்லது விளையாட்டு கூடமாக மாற்றிதர வேண்டும் என்று கோரினர்.

இதை தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அந்த பகுதியில் அமைய இருந்த பசுமை உரக்குடிலை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க உத்தரவிட்டு அந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு கூடம் அமைக்க ஏற்பாடு செய்யும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உரக்குடில் அமைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தபோது அந்த பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். உரக்குடிலை அகற்ற வேண்டும் என்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். இந்தநிலையில் அந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை இருந்தால் அதை செய்ய வேண்டாம். இந்த பகுதியில் திருமண மண்டபம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடுங்கள் என்று நகராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சிவகாசி நகராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த அமைச்சருடன் சிவகாசி நகராட்சி கமி‌ஷனர் அசோக்குமார், என்ஜினீயர் சீனிவாசன், உதவி என்ஜினீயர் முத்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சங்கரநாராயணன், சுப்பிரமணியன், என்ஜினீயர் நாராயணசாமி, பள்ளப்பட்டி பஞ்சாயத்து செயலர் லட்சுமண பெருமாள்சாமி, சிவகாசி அ.தி.மு.க. நகர செயலாளர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மல்லி ராஜவர்மன், திருத்தங்கல் ரமணா, பிலிப்வாசு, முன்னாள் ஒன்றிய துணைதலைவர் சுடர்வள்ளி, முன்ளாள் கவுன்சிலர் திருமுருகன், யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story