திருச்சி அருகே 3 நாட்கள் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாடு நிறைவு பெற்றது


திருச்சி அருகே 3 நாட்கள் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாடு நிறைவு பெற்றது
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே 3 நாட்கள் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாடு நேற்று நிறைவு பெற்றது.

மணப்பாறை,

முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடும் இஜ்திமா என்னும் 3 நாள் மாநாடு திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூரில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதற்காக பல லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல், வாகனங்கள் நிறுத்துமிடம், தங்கும் இடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்விளக்கு வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பஸ், ரெயில்களில் வந்து குவிந்தனர்.

26-ந் தேதி காலை பஜ்ர் தொழுகைக்குப்பின் துஆ ஓதப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை முறையை பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும் என்பது குறித்து புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. நேற்று முன்தினம் எளிய முறையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு திருமணம் நடைபெற்றது.

நிறைவு நாளான நேற்று அதிகாலை மாநாடு தொடங்கியது. மதியம் வரை மார்க்கம் தொடர்பான பல்வேறு சொற்பொழிவுகள், வெளியூர் செல்லும் ஜமாத்தினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மதியம் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு துஆ ஓதப்பட்டது. தப்லீக் இஜ்திமாவின் அகில உலக பொறுப்பாளர் டெல்லியை சேர்ந்த முகமது சக்கது மவுலானா நிறைவு சொற்பொழிவை இந்தியில் நிகழ்த்தினார். அது, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. 32 நிமிடங்கள் சிறப்பு துஆ எனும் பிரார்த்தனை நடைபெற்றது.

இறை அச்சத்தோடு வாழ்தல், இம்மை மற்றும் மறுமைக்கான வாழ்வு, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்யவும், நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழவும், பிறருக்கு உதவுதல், கீழ்படிதல், உதவி புரிவது, தொண்டு புரிதல், ஈமானோடு இறுதி வரை இருப்பது, இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி வாழ்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த துஆ வில் கேட்கப்பட்டது. மாநாட்டு திடல் நிரம்பி வழிந்ததால் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் வெளியில் நின்றபடி துஆ வில் கலந்து கொண்டனர். துஆ முடிந்ததும் அனைவரும் கலைந்து செல்ல தொடங்கினர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைவரும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதை கடைபிடித்து அனைவரும் சென்றனர்.

மாநாடு நடைபெற்ற 3 நாட்களும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அதற்கான பணியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் இரவு-பகலாக ஈடுபட்டனர். இதேபோல மாநாட்டு திடலை சுற்றி பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் இரவு-பகலாக மருத்துவர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதேபோல, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

Next Story