நகரும் படிக்கட்டில் இருந்து விழுந்து குழந்தை சாவு மெட்ரோ ரெயில் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் முதல்-மந்திரி குமாரசாமி அறிவுரை
மெட்ரோ ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டில் இருந்து குழந்தை விழுந்து இறந்த நிலையில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு, நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில்கள் இயங்கி வருகின்றன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு மார்க்கத்தில் ஏற்கனவே 6 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் 3 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நாகசந்திரா-எலச்சனஹள்ளி மார்க்கத்தில் 6 பெட்டிகளுடன் இயங்கும் முதல் மெட்ரோ ரெயில் மற்றும் பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு மார்க்கத்தில் 6 பெட்டிகளுடன் இயங்கும் 2 மெட்ரோ ரெயில்கள் ஆகியவற்றின் புதிய சேவைகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. மல்லேசுவரம் மந்திரி சதுக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வைத்து நேற்று பச்சைக்கொடி அசைத்து 6 பெட்டிகளுடன் இயங்கும் மெட்ரோ ரெயில் சேவையை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதிகாரிகள் மீது தவறு இல்லை
பச்சை வழித்தடத்தில் (நாகசந்திரா-எலச்சனஹள்ளி) 3 பெட்டிகளுடன் இயங்கிய மெட்ரோ ரெயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 6 பெட்டிகளுடன் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுவது நகர மக்களுக்கு அதிக பயன் அளிக்கும். இதில் ஒரு பெட்டி பெண் பயணிகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டில் இருந்து குழந்தை விழுந்து இறந்த சம்பவத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் மீது தவறு இல்லை. இது கவனக்குறைவால் நடந்த சம்பவம். மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும். அதிகாரிகளும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story