நாமக்கல்லில் 4-வது நாளாக சாலைமறியல்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 450 பேர் கைது 55 பேரை சிறையில் அடைக்க உத்தரவு
நாமக்கல்லில் நேற்று 4-வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 450 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 55 பேரை வருகிற பிப்ரவரி 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு தனபால் உத்தரவிட்டார்.
நாமக்கல்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி நாமக்கல் பூங்கா சாலையில் கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. நேற்றும் சாலைமறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக் கப்பட்டு இருந்தது. இவர்கள் நேற்று காலையில் சாலைமறியலுக்கு வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒவ்வொருவராக கைது செய்து வாகனங்களில் ஏற்றி, திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
இதையறிந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நாமக்கல் பஸ்நிலையம் எதிரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்செல்ல போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் வாகனங்களில் ஏற மறுத்த அவர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு பூங்கா சாலைக்கு வந்தனர். பின்னர் பூங்கா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் வாகனங்களில் ஏற்றி சென்று திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். இதில் 400 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 395 பேரை நேற்று இரவு 9 மணிக்கு போலீசார் விடுவித்தனர்.
மீதமுள்ள 55 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு தனபால் பிப்ரவரி மாதம் 4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்த போலீசார், சேலம் சிறைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட 21 பேரும் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story