சின்னமுட்லு அணையை கட்டக்கூடாது கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


சின்னமுட்லு அணையை கட்டக்கூடாது கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 29 Jan 2019 4:15 AM IST (Updated: 29 Jan 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சின்னமுட்லு அணையை கட்டக்கூடாது என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 218 கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், தற்போது ஆய்வில் உள்ள சின்னமுட்லு அணை, அரும்பாவூர் பெரிய ஏரிக்கு வரும் நீரை மறித்து கட்டப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அணை கட்டினால் அரும்பாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயத்திற்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்காமல் போயிடும். எனவே அந்த அணை கட்டுவதற்கான அதிகாரிகள் ஆய்வினை நிறுத்திவிட்டு அரும்பாவூர் பெரிய ஏரியை தரம் உயர்த்தி அணைக்கட்டாக கட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா சின்னமுட்லு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், சின்னமுட்லு பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அணைக்கட்டு கட்டுவதற்கு தேர்வான இடத்தில் எங்களின் குல தெய்வங்கள் உள்ளன. எனவே சின்னமுட்லு அணைக்கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக அரும்பாவூர் பெரிய ஏரியை தரம் உயர்த்தி அணைக்கட்டாக மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆலத்தூர் தாலுகா காரை அரசு பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் கொடுத்த மனுவில், நாங்கள் மலையப்ப நகரில் வசித்து வருகிறோம். சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். பெரம்பலூர் மலையப்பநகர் வழியாக காரைக்கு செல்லும் தனியார் மினி பஸ்களில் பள்ளிக்கு சென்று வருகிறோம். ஆனால் அந்த தனியார் மினி பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு நாங்கள் சிரமத்துடன் நடந்து சென்று வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியின் வழியாக காரைக்கு அரசு பஸ்கள் இயக்கவும், பள்ளிகளில் அதற்கான இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா பெரிய வெண்மணி வடக்கு தெருவை சேர்ந்தவர் வரதராஜன் கொடுத்த மனுவில், குடியரசுத் தினத்தன்று பெரிய வெண்மணி கிராமத்தில் குறைந்த உறுப்பினர்களை கொண்டு சிறிது நேரம் நடந்த கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து விட்டு, கிராம மக்களை அனைவரும் பங்கேற்க வைத்து மீண்டும் ஒரு முறை கிராம சபை நடத்த வேண்டும் என கூறியிருந்தார். 

Next Story