குமாரபாளையம் அருகே சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


குமாரபாளையம் அருகே சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 28 Jan 2019 10:00 PM GMT (Updated: 28 Jan 2019 8:17 PM GMT)

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தில் சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

நாமக்கல், 

குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் அரசு நிதி உதவியோடு சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமியிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பல்லக்காபாளையத்தில் 10.89 ஏக்கர் பரப்பளவில் சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்காக தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தனியார் நிறுவனம் ஒன்று சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சவுதாபுரம், எலந்தக்குட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு உட்பட்ட பெதக்காட்டூரில் சுமார் 25 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளது.

அதேபோல் மற்றொரு தனியார் நிறுவனம் சார்பில் ரூ.157.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்ட வரைவை தயார் செய்து, தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை மூலமாக அரசு அனுமதிக்கு விண்ணப்பம் செய்திருப்பது தெரியவந்து உள்ளது.

இந்த நிலையங்கள் அமைய உள்ள இடங்களுக்கு அருகே ஓடைகளும், ஏரிகளும் உள்ளன. அந்த ஓடைகளில் வரும் நீர் காவிரியில் சென்றடைந்து வருகிறது. குறிப்பாக நன்னீர் ஓடை பகுதியில் உள்ளாட்சி அமைப்புகளால் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு பெதக்காட்டூர், புதுப்பாளையம், ரங்கனூர், வள்ளிநகர், வண்ணாம்பாறை, மாம்பாளையம் மற்றும் கரட்டாங்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஓடைக்கு அருகே இருக்கும் விவசாய கிணறுகள் மூலம் விவசாயமும் நடந்து வருகிறது. அந்த பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அவைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஓடைகள் வழியாக காவிரி ஆற்றில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீரும் மாசு அடையும் நிலை உருவாகும். இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்படுவதோடு, விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். அதேபோல் அதன் அருகே இருக்கும் மேட்டூர் கால்வாய் பாசன பகுதிகளும் மாசுபடும். இதன் காரணமாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story