சுள்ளங்குடி கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி தொடங்க வலியுறுத்தல்


சுள்ளங்குடி கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி தொடங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jan 2019 10:30 PM GMT (Updated: 28 Jan 2019 8:22 PM GMT)

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனை பட்டா, திருமண உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் திருமானூர் அருகே உள்ள சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் அளித்த மனுவில், திருமானூர் அருகே உள்ள சுள்ளங்குடி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளோம். கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்து விற்று எங்களது வாழ்க்கையை நடத்தி வந்தோம். கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மாட்டு வண்டி மணல் குவாரி நிறுத்தப்பட்டதால், தற்போது எங்களது குடும்ப வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. மேலும் மாடுகளுக்கும் தீவனம் உள்ளிட்ட பொருட் களை வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம். இச்சூழ் நிலையில் இருந்து எங்களை காக்க சுள்ளங்குடி கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி தொடங்கி எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தேளூர் கிராமம் கள்ளாங்கொத்து பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 30 குடும்பங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவறுமை கோட்டிற்கும் கீழ் உள்ளவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமாகும். எனவே அந்த இடங் களை குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா போட்டு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story