“தெருவில் இறங்கி போராடுவதா?’ ஜாக்டோ–ஜியோ அமைப்பிற்கு ஐகோர்ட்டு கண்டனம் ‘அரசின் நிதி விவகாரங்களில் தலையிட முடியாது’ என்றும் கருத்து


“தெருவில் இறங்கி போராடுவதா?’ ஜாக்டோ–ஜியோ அமைப்பிற்கு ஐகோர்ட்டு கண்டனம் ‘அரசின் நிதி விவகாரங்களில் தலையிட முடியாது’ என்றும் கருத்து
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

சட்ட ரீதியாக அணுகாமல் தெருவில் இறங்கி போராடுவதா என்று ஜாக்டோ–ஜியோ போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அரசின் நிதி விவகாரங்களில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை,

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் (ஜாக்டோ–ஜியோ) கடந்த மாதம் 4–ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த லோகநாதன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக அரசிடம் விளக்கம் கேட்பதற்காக அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணையின்போது ஜாக்டோ–ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக கூறி, போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ–ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து ஜாக்டோ–ஜியோ போராட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசின் எச்சரிக்கையையும் மீறி அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்லாயிரணக்கானோர் தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டு கைதாகினர். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு கிடப்பதால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜாக்டோ–ஜியோ தரப்பில் மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, ‘‘மராட்டியம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் தற்போதும் பழைய ஓய்வூதியத் திட்டம் தான் அமலில் உள்ளது. ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை. எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2017–ம் ஆண்டே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, இதுதொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு உறுதி அளித்தது.

ஆனால் கொடுத்த உறுதியை அரசு நிறைவேற்றவில்லை. ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஸ்ரீதர் அறிக்கை, ஊதிய முரண்பாடு தொடர்பான சித்திக் அறிக்கையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எந்தவித தகவலும் இல்லை. நிதிப்பற்றாக்குறையே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேறு வழியின்றி தான் போராட்டத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் அளித்த உறுதியை வாபஸ் பெற்று, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால் எங்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்வது மட்டுமல்லாமல் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்று வாதாடினார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், ‘‘ஆசிரியர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் முழுவதுமாக முடங்கிவிட்டன. செய்முறைத்தேர்வுகள், பருவத்தேர்வுகள் தொடங்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தான், ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பது புதிய பிரச்சினைக்கு வழி வகுக்கும். தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களும், தங்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு, கோர்ட்டுக்கு வரும் நிலை ஏற்படும். ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதை தவிர்க்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணலாமே’’ என்று கூறி, விசாரணையை சிறிது நேரம் ஒத்திவைத்தனர்.

பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ–ஜியோ தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத், ‘‘21 மாத நிலுவைத்தொகையை அரசு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகளிடம் கோரினார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று நீங்கள் அளித்த உறுதியை ஏற்கனவே வாபஸ் பெற்றுவிட்டீர்கள். அதோடு தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஸ்ரீதர் கமிட்டி, சித்திக் கமிட்டி ஆகிய 2 அறிக்கைகளிலும் ‘அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை’ என அவர்களின் நிலையை தெரிவித்து உள்ளனர்.

எனவே அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரங்களில் கோர்ட்டு தலையிட முடியாது. அரசும், ஊழியர்களும் இந்த விவகாரத்தில் பேசி தீர்வு காணலாம்’’ என தெரிவித்தனர்.

மேலும், ‘‘தொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சட்ட ரீதியாக அணுக நடவடிக்கை எடுக்காமல், தெருவில் இறங்கி போராட சென்றுவிட்டீர்கள்’’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அதற்கு ஜாக்டோ–ஜியோ தரப்பு வக்கீல், ‘‘கோர்ட்டின் கருத்தை ஏற்றுக்கொண்டு தான் இத்தனை நாட்கள் நடந்தோம்’’ என்று தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், ‘‘இதுவும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடை கோரி வேறொருவர் தொடர்ந்த வழக்கு தான். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு அல்ல’’ எனக்கூறி, வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 18–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story