செய்யாறில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 5 பேர் கைது


செய்யாறில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2019 3:45 AM IST (Updated: 29 Jan 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

செய்யாறு, 

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் (ஜாக்டோ-ஜியோ) 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் செய்து வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை 10 மணியளவில் செய்யாறு தாலுகா அலுவலகத்தின் முன்பாக கூடியிருந்த ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை கலைந்து செல்லும்படி துணை சூப்பிரண்டுகள் குணசேகரன் (செய்யாறு), செந்தில் (ஆரணி), அசோக்குமார் (வந்தவாசி) ஆகியோர் எச்சரித்து கூட்டத்தை கலைத்தனர். எனினும் தொடர்ந்து ஆசிரியர்கள் ஆங்காங்கே கூடியிருந்து காலை 11.45 மணியளவில் செய்யாறு - ஆற்காடு சாலையில் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு மற்றும் 2 இடங்களில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மறியலில் ஈடுப்பட்ட 670 பேரை கைது செய்து வேதபுரீஸ்வரர் கோவில் மண்டபத்தில் அடைத்தனர். மாலை 6 மணியளவில் ஆசிரியைகளை முதலில் விடுவித்து மண்டபத்திலிருந்து வெளியேற்றினர். ஆனால் வெளியே சென்ற ஆசிரியைகள் சக ஆசிரியர்களை விடுதலை செய்து அனுப்பினால் தான் நாங்கள் வீடு திரும்புவோம் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் “விடுதலையாகி செல்ல விருப்பமில்லை என்றால் மண்டபத்திற்கு உள்ளே செல்லுங்கள், அவர்களை விடுவிக்கும்போது நீங்களும் செல்லலாம்” என கூறியதால், ஆசிரியைகள் மீண்டும் மண்டபத்திற்குள் சென்றனர். மாலை 6½ மணியளவில் சக ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டபிறகு ஆசிரியைகள் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் கடைசியாக செல்ல இருந்த ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளான வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு, முதன்மை வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாவட்ட பொருளாளர் வெங்கடபதி, வட்டார தலைவர் பிச்சாண்டி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் நீதிபதி சுந்தரபாண்டியன் உத்தரவின்பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story