மலேசியா சென்ற ஓட்டல் தொழிலாளி மாயம்? மீட்டு தரும்படி மனைவி, கலெக்டரிடம் மனு


மலேசியா சென்ற ஓட்டல் தொழிலாளி மாயம்? மீட்டு தரும்படி மனைவி, கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 29 Jan 2019 3:30 AM IST (Updated: 29 Jan 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவுக்கு சென்ற ஓட்டல் தொழிலாளியை மீட்டு தரும்படி மனைவி, குழந்தைகளுடன் வந்து திண்டுக்கல் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள சட்டக்காரன்பட்டியை சேர்ந்தவர் ஜோதி. இவர் தனது 2 மகள்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து கலெக்டர் டி.ஜி.வினயிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கும், ராமராஜ் (வயது 34) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு வித்யாஸ்ரீ, சவுமியா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை செய்தார். பின்னர் மலேசியாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு கடந்த 2015-ம் ஆண்டு வேலைக்கு சென்றார்.

இதற்கிடையே அந்த ஓட்டல் உரிமம் காலாவதியாகி விட்டதால், அதன் நிர்வாகத்தினர் தமிழகத்துக்கு வந்து விட்டனர். ஆனால், எனது கணவர் மட்டும் மலேசியாவில் தொடர்ந்து வேலை செய்தார். எங்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக எனது கணவரை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.

செல்போனில் தொடர்பு கொண்டால் அவர் அதை எடுக்காமல் இருந்தார். மேலும் கடந்த ஒரு வாரமாக அவருடைய செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது கணவர் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. எனவே, மலேசியாவுக்கு சென்ற எனது கணவரை மீட்டு ஒப்படைக்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story