மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கொடைக்கானலில் 43 கட்டிடங்களுக்கு இன்று ‘சீல்’ வைப்பு


மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கொடைக்கானலில் 43 கட்டிடங்களுக்கு இன்று ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 29 Jan 2019 3:45 AM IST (Updated: 29 Jan 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின் பேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்ட 43 கட்டிடங்களுக்கு சீல்’ வைக்கப்படுகிறது.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இங்கு நகர வடிவமைப்பு சட்ட, திட்டங்களை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டன. எனவே இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை கொடைக்கானலில் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்ட ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட 43 கட்டிடங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ‘சீல்’ வைக்க உத்தரவிட்டது. இதற்காக பல்வேறு நகராட்சிகளில் இருந்து நகரமைப்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 4 குழுக்களாக பிரிந்து 43 கட்டிடங்களுக்கும் ‘சீல்’ வைக்கும் பணியை இன்று காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் மேற்கொள்வார்கள். மேலும் இதுகுறித்த அறிக்கையை அவர்கள் நாளை (புதன்கிழமை) மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியில் நகராட்சி துறையினருடன், காவல் துறை, மின்வாரிய துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் இணைந்து செயல்படுவார்கள் என்று நகராட்சி ஆணையாளர் முருகேசன் தெரிவித்தார். இந்த 43 கட்டிடங்களில் ஏற்கனவே 39 கட்டிடங்களுக்கு கடந்த வாரமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட இருப்பது கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story